கள்ளர் பள்ளிகளுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்
கம்பம் : கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் செயல்படும் 300 க்கும் மேற்பட்ட தொடக்க, ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்மேல்நிலை பள்ளிகள் 300க்கும் அதிகம் உள்ளன. இப்பள்ளிகளில் 100 க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு பல ஆண்டுகளாக கலந்தாய்வு நடக்கவில்லை. கலந்தாய்வு நடக்காததால் பதவி உயர்வு பெறுவதில் தடை ஏற்படுகிறது. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பும் போது அவர் பணிபுரியும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க காலிப்பணியிடங்களை நிரப்பவும், பதவி உயர்வு உரிய காலத்தில் கிடைக்க கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தவும் இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.