பஸ்சை மறித்த படையப்பா
மூணாறு: மூணாறு அருகே நேற்று முன்தினம் இரவு கேரள அரசு பஸ்சை படையப்பா வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
மூணாறு பகுதியில் நடமாடும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் அருகில் உள்ள குருசடி பகுதியில் காட்டிற்குள் நேற்று முன்தினம் காலை முதல் முகாமிட்டது.
இரவு 8:30 மணிக்கு ரோட்டில் நடமாடியது. அப்போது மூணாறில் இருந்து உடுமலைபேட்டைக்கு சென்ற கேரள அரசு பஸ்சை வழிமறித்தது.
பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். யானை ரோட்டில் வருவதை பார்த்த பஸ் டிரைவர் ஜெயகுமார் பஸ்சை 300 அடி தூரம் பின்னோக்கி நகர்த்தினார். எனினும் படையப்பா பஸ்சை விரட்டியவாறு சென்றதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இதனிடையே யானை ரோட்டை விட்டு சற்று நகர்ந்ததால், அந்த இடைவெளியில் டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டி சென்று யானையை கடந்தார். இருப்பினும் யானை சிறிது தூரம் பஸ்சை பின் தொடர்ந்து சென்றது.