ஆய்வறிக்கையால் ஏல விவசாயிகள் கவலை
கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் மழை பொழிவு நாட்கள், மழையின் அளவு குறைந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியானதை பார்த்து ஏல விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. சமீப காலமாக நோய் தாக்குதல், அதிக மழை, அதிக வெயில், கூடுதல் பனி போன்ற சீதோஷ்ண நிலைகளால் மகசூல் குறைவு ஏற்படுகிறது.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் மழை காரணமாக செடிகள் சேதமடைவது அதிகரித்துள்ளது.
எனவே இடுக்கி மாவட்டத்தில் குறிப்பாக பீர் மேடு, தேவிகுளம், நெடுங்கண்டம், தொடுபுழா தாலுகாக்களில் ஏலக்காய் சாகுபடி பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளில் பெய்த மழை, பனிப் பொழிவு, வெயில் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
பாம்பாடும்பாறை ஏலக்காய் ஆராய்ச்சி மைய தலைவர் பேராசிரியர் முருகன், விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் கடந்த 40 ஆண்டுகளில் மழைப்பொழிவு நாட்கள் கணக்கீடு செய்யப்பட்டதில், மழை பெய்யும் நாட்கள் சராசரியாக ஆண்டிற்கு 20 நாட்கள் மழை பெய்வது குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதே போல ஆண்டு சராசரி மழைப் பொழிவில் 13.62 மி.மீ., மழை குறைந்துள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏலக்காய் சாகுபடி செய்யும் பகுதிகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
சுற்றுப்புறச் சூழல், சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு சாகுபடி தொழில்நுட்பங்களை மாற்ற இந்த ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆய்வறிக்கையின் தகவல்கள் ஏல விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.