ஸ்ரீரெங்காபுரத்தில் ஊராட்சியில் வீட்டருகில் பள்ளம் தோண்டி தேக்கும் அவலம் : கழிவுநீர் கால்வாய் பணி அரை குறையாக உள்ளதால் மக்கள் அவதி
தேனி : தேனி ஒன்றியம், ஸ்ரீரெங்காபுரத்தில் கழிவுநீர் செல்லும் கால்வாய் அமைக்கும் பணி முழுமைபெறததால் வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி தேக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வுாகன கோரி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி குடியிருப்போர் குமுறுகின்றனர்.
ஸ்ரீரெங்காபுரத்தில் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 8 வது வார்டில் ஸ்ரீநகர் பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில் ஊராட்சி நிர்வாகம் பாராபட்சம் காட்டுவதாகவும், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முழுமையாக செய்து முடிக்காததால் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீநகர் குடியிருப்போர் அருணா, ராஜேஸ்வரி, கங்காஜோதி, மகேஸ்வரி ஆகியோர் தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக கூறியதாவது: ஸ்ரீநகரில் 3 தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருப்புகள் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பல ஆண்டுகளாக ரோடு வசதி செய்து தரக்கோரி அரசு அலுவலகங்களில் மனு அளித்தோம். அதன்படி 10 மாதங்களுக்கு முன் சாக்கடை வடிகாலுடன் சேர்த்து சிமெண்ட் ரோடு அமைக்கும் பணி நடந்தது. 4 மாதங்களில் பணி முடித்தனர். ஆனால், பணியை முழுமையாக முடிக்கவில்லை. இந்த பகுதியில் சாக்கடை
அமைத்தாலும் அதனை எந்த பகுதியும் இணைக்கவில்லை. இதனால் சாக்கடையில் கழிவுநீர் நுழைவு பகுதியில் தேங்குகிறது. மழைகாலங்களில் தெரு நுழைவாயில் கழிவு நீர், மழைநீரும் குளம் போல் தேங்குகிறது.
அருகில் உள்ள தெருக்கள் வழியாக கழிவுநீர் கடந்த செல்ல வழியின்றி தேங்குகிறது. இதனால் அருகில் உள்ள தெருவில் வசிப்பவர்களுடன் பிரச்னை ஏற்படுகிறது. சாக்கடை வடிகால் பணியை முழுமையாக முடித்து தரும்படி ஊராட்சி அலுவலகம், கலெக்டரிடம் மனுக்கள் வழங்கப்பட்டது.
மனுக்கள் வழங்கி நான்கு மாதங்களாகியும் எந்த நடவடிக்கையு்ம் இல்லை. இதனால் வீட்டருகில் இடவசதி உள்ளவர்கள் தங்கள் கழிவுநீரை பள்ளம் தோண்டி பூமிக்குள் விடுகின்றோம். இக் கழிவு நீர் பல நாட்களாக தேங்குவதால் அதில் உற்பத்தியாகும் கொசு தொந்தரவால் உடல்நிலை பாதிப்படைகிறது. இவர்கள் பணியை விரைந்து முடிப்பார்கள் என பலரும் வீட்டு முன் படிகள் அமைக்காமல் உள்ளனர்.
குடிநீர் வழங்குவதில்லைரோடு அமைக்கும் பணிதுவங்க உள்ளது என கூறி ஓராண்டிற்கு முன் குடிநீர் வழங்குவதை ஊராட்சி நிர்வாகம் நிறுத்தியது. அதன் பின் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள அனைவரும் ஆழ்துளைகிணற்று நீரினை குடிக்கின்றோம்.
இதனால் இப்பகுதியில் வசிக்கும் பலர் சளி,காய்ச்சல் பாதிப்புகளுக்கு உள்ளாகி சிரமம் அடைகின்றோம். அதே போல் நுழைவாயில் பகுதியில் ரோடு பணி முழுமையடையாததால் சிறு மழை பெய்தால் கூட சகதியாக காட்சியளிக்கிறது. இவ்வழியாக வரும் பலர் வழுக்கி விழும் நிலை உள்ளது.
சாக்கடை பணியை முழுமையாக முடிக்கவும், நுழைவுவாயில் பகுதியில் ரோடினை சீரமைத்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.