தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
போடி: போடி அருகே பத்திரகாளிபுரத்தில் இருந்து மாற்றுப் பாதையாக மீனாட்சிபுரம் செல்லும் ரோட்டில் உள்ள ஓடைப் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போடி அருகே பத்திரகாளிபுரம், விசுவாசபுரம் மெயின் ரோடு வழியாக இரண்டரை கி.மீ., துாரத்தில் மீனாட்சிபுரம் அமைந்து உள்ளது. பத்திரகாளிபுரத்தில் இருந்து மாற்றுப் பாதையில் ஒன்றரை கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம். இதனால் அரை கி.மீ., துாரம் சுற்றிச் செல்வது குறைகிறது. இந்த ரோட்டில் உள்ள ஓடைப் பாலத்தில் தடுப்புச்சுவர் முழுவதும் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் வேகமாக வருபவர்கள், தடுப்புச்சுவர் இல்லாதது தெரியாத நிலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் இந்த ரோட்டில் மக்கள் வர தயக்கம் காட்டி வருகின்றனர். விளைப் பொருட்களை வாகனங்களில் கொண்டு வர விவசாயிகள்சிரமப்படுகின்றனர். விவசாயிகள், மக்கள் பயன் பெறும் வகையில் ஓடைப் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைத்திட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.