போடியில் ஆண்டுக்கு நாய்கடியால் 1700 பேர் பாதிப்பு
போடி: போடியில் ஆண்டுக்கு 1700 பேர் நாய் கடியால் பாதித்து சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாய்கள் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த உள்ளாட்சிகளில் கருத்தடை ஆப்பரேஷன் தீவிரப்படுத்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கால்நடை துறையின் 2022 ன் கணக்கின் படி 25,000 தெரு நாய்களும் 15,000 வளர்ப்பு நாய்களும் உள்ளன. தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து பொது மக்களை கடித்து அச்சுறுத்துவது அன்றா நடைபெறும் நிகழ்வாக உள்ளது.
போடி சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து நாய்கடியால் பாதித்து அரசு மருத்துவமனைக்கு தினம் தோறும் 4 முதல் 6 பேர் சிகிச்சைக்கு செல்கின்றனர். தெரு நாய்களால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி பலர் காயம் அடைந்து உள் நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டம் முழுவதும் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் நாய் கடியால் பாதிப்படைவதாக கூறுகின்றனர்.
நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை ஆப்பரேஷன் செய்தல்,வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றிற்கு ஒரு நாய்க்கு ரூ.1700 வீதம் செலவிட உள்ளாட்சிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இவை பெயரளவுக்கு நடப்பதால் நாய்களின் இனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளாட்சிகளில் நாய்களுக்கு கருத்தடை செய்வதில் ஆர்வம் காட்டாமல் புதிய விதியினை கூறி தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என ஒதுங்குகின்றனர்.
போடி அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில்,
‘போடி அரசு மருத்துவமனைக்கு நாய் கடியால் மாதம் சராசரி 150 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.வி., ஊசி போடப்படுகிறது. வெறி நாய் கடித்த நபர்களுக்கு ‘ரேபிஸ் இமினோ குலோபிலின்’ ஊசி போடப்படுகிறது. ஜன., 2024 முதல் டிச., 2024 வரை 1700 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். இது போல் மாவட்டத்தில் நாய் கடியால் அதிக அளவில் பாதிபடைகின்றனர’, என்றார்.
வெறி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்
மணிகண்டன், போடி : முன்பு இருந்த நடை முறை போல நாய் வளர்ப்பவர்கள் உள்ளாட்சிகளில் லைசென்ஸ் பெறவும்,நோய்கள் இல்லை என்ற சான்றும், அதற்கு வரியும் செலுத்த வேண்டும். கருத்தடை தடுப்பூசி செலுத்த வேண்டும். பிராய்லர் கோழி கடைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளை முறையாக அப்புறப் படுத்தாமல் சிலர் ரோட்டோரம் கொட்டுகின்றனர். இதை உண்ணும் நாய்கள் தோல் நோயால் பாதித்து வெறி நோய் பாதிப்பிற்கும் காரணமாகிறது.
இறைச்சி கழிவுகளை பொது வெளியில் கொட்டுவதை தடுக்க வேண்டும். நாய்களுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி, கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.