போடி ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
போடி: போடி ரயில்வே ஸ்டேஷனில் மின் மயமாக்கல் பணி நிறைவு பெற்ற நிலையில் நேற்று ரயில்வே சுரங்கப் பாதையில் நீர் கசிவு, ரயில்வே டிராக் குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை — போடி வழித்தடம் 25 ஆயிரம் வோல்ட் மின் பாதையாக மாற்றப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரை – போடி அகல ரயில் பாதையில் 120 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
நேற்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா மதுரை — போடி இடையே அமைக்கப்பட்டு உள்ள ரயில்வே டிராக், போடியில் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே சுரங்கப் பாதையில் நீர்கசிவு, பயணிகள் பிளாட்பாரம், தீ தடுப்புக்கான எச்சரிக்கை அலாரம் கருவி இயங்குவது, ரயில்வே இருப்புப் பாதை, ரயில் ஓட்டுநர் அறை, மின் விநியோக உபகரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
போடியில் இருந்து மதுரைக்கு தினமும் காலை 8:30 மணிக்கும், மதுரையில் இருந்து – போடிக்கு மாலை 6:00 மணிக்கு தினசர ரயில் இயக்க வேண்டும்.
போடி — சென்னைக்கு தினசரி ரயில் இயக்கவும், சென்னை செல்ல விழுப்புரம், தாம்பரம் வழியாக ஒரு ரயிலை இயக்க வேண்டும் எனவும், போடி ரயில்வே ஸ்டேஷனில் ஏலக்காய்க்கு கிட்டங்கி (வேர் ஹவுஸ்) கூடுதல் பிளாட்பாரம் அமைக்க வேண்டும் என ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பில் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை விடுத்தனர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டமேலாளர் தெரிவித்தார்.