அரசு கள்ளர் பள்ளிகளுக்கு மின் கட்டணம் செலுத்தி திரும்ப பெற முடியாமல் தவிப்பு; தலைமையாசிரியர்கள் பு லம்பல்
கம்பம் : அரசு கள்ளர் தொடக்க பள்ளிகளுக்கான மின்கட்டணத்தை செலுத்தி விட்டு, அந்த பணத்தை திரும்ப பெற முடியாமல் தலைமையாசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் அரசு கள்ளர் துவக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு மின்கட்டணத்தை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நேரடியாக செலுத்தி வருகின்றன. கள்ளர் சீரமைப்பு துறையில் மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் பள்ளி செலவுகளுக்கென முன்கூட்டியே குறிப்பிட்ட தொகை பள்ளி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
எனவே இந்த பள்ளிகளில் மின் கட்டண பிரச்னை இல்லை.
ஆனால் கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் உள்ள 200 க்கும் மேற்பட்ட தொடக்க பள்ளிகளின் மின்கட்டணத்தை ( ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ) சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் தனது சொந்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்திய பணத்தை திரும்ப பெற தலைமையாசிரியர்கள் ஆண்டு கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த மன உளைச்சலில் இருந்து தொடக்க பள்ளி தலைமையாசிரியர்களை விடுவிக்க கள்ளர் சீரமைப்பு துறையின் இணை இயக்குநர் முன் வர வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.