18 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பிச்சாங்கரை மலைக் கிராம ரோடு நோயாளிகளை ‘டோலி’ கட்டி துாக்கி வரும் அவலம்
போடி: போடி அருகே பிச்சாங்கரை மலைக் கிராமத்திற்கு ரோடு அமைக்க விவசாயிகள் நிலங்களை தானமாக வழங்க முன் வந்து ரோடு பணி துவங்கி 18 ஆண்டுகள் ஆகியும் வனத்துறை முட்டு கட்டையால் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் நோயாளிகளை ‘ டோலி’ கட்டி தூக்கி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பிச்சாங்கரை மலைக் கிராமம். கத்தாளம்பாறை, நடுப்பாறை, அரண்மனை பாறை உள்ளிட்ட பகுதியில் 100 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து காபி, மிளகு, ஏலம், பலா, ஆரஞ்சு. இலவம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். விளை பொருட்களை விற்பனைக்கு போடிக்கு கொண்டு வர ரோடு வசதி இல்லை.
பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 4.8 கி.மீ., தூரம் ரோடு அமைக்க 18 ஆண்டுகளுக்கு முன்பு ரூ11.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக ரூ.1.75 கோடி செலவில் பாலம் கட்டும் பணி நடந்தது. அதன் பின் பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது. ரோட்டிற்காக விவசாயிகள் நிலங்களை தானமாக வழங்க முன்வந்தும் வனத் துறையினர் முட்டு கட்டையால் ரோடு அமைக்கும் பணி கிடப்பில் உள்ளன. தெரு விளக்கு அமைக்க ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 15 ஆண்டுகள் ஆகியும் திட்டம் கிடப்பில் உள்ளன.
விவசாயிகள் கருத்து
விளை பொருட்கள் சுமந்து வரும் நிலை
சண்முக ஆனந்த், விவசாயி, போடி : பிச்சாங்கரை மலைக் கிராமத்திற்கு ரோடு, மின் வசதி செய்து தர மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து 18 ஆண்டுகள் ஆகியும் பணி துவங்கிய நிலையில் கிடப்பில் உள்ளன. ரோடு வசதியின்றி விளை பொருட்களை கொண்டு வரவும், தளவாட பொருட்களைக் கொண்டு செல்லவும் முடியாததால், தலைச்சுமையாகவும் கழுதைகள் மூலமாகவும் கொண்டு வருகின்றோம். விவசாய வேலைக்கு ஆட்கள் வர தயங்குகின்றனர். ரோடு, சிறு பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோயாளிகள் சிகிச்சை பெற தவிப்பு
மணிகண்டன், விவசாயி, போடி : ரோடு வசதி இல்லாததால் இங்கு வசிப்போருக்கு திடீர் உடல்நல குறைவு, பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் மருத்துவ வசதி பெற ‘டோலி’ கட்டி தூக்கி வர வேண்டும். நீண்ட தூரம் நடந்து வர முடியாத நிலையில் சில நேரங்களில் உயிர் பலியாகும் நிலை ஏற்படுகிறது. அவசர தொடர்புக்கு அலைபேசி டவர் வசதி இல்லாமல் மலைக் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மின் வசதி இல்லாமல் இரவில் காட்டு மாடுகளுக்கு பயந்து வாழும் நிலை உள்ளது. மழைக் காலங்களில் கத்தாளம் பாறை ஓடையில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் ஓடையை கடக்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.ரோடு வசதி ஏற்படுத்தினால் விவசாயம் வளர்ச்சி அடைவதுடன் போடி பகுதி தொழில் வளர்ச்சி, சுற்றுலா மேம்படும். விவசாயம், மக்கள் பயன் பெற ரோடு, பாலம், மின் வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடு பணி துவங்க வேண்டும்
தீர்வு : ரோடு அமைக்க விவசாயிகள் நிலங்களை தானமாக வழங்க முன் வரும் நிலையில் மலைக் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியை விரைந்து முடித்திட வனத்துறை அனுமதி வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.