Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

சின்னமனுார் தீயணைப்பு நிலைய இடத்தேர்வில்… அதிருப்தி; பயனுள்ள இடத்தில் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

சின்னமனுார்: சின்னமனுார் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய்வதில் இருந்த சிக்கல் நீங்கி, இரண்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இதற்கு பொது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

இந்நகராட்சியில் 2021ல் தனியார் வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டது.

சின்னமனுார், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி உட்பட 19 கிராமங்கள், மேகமலைப் பகுதியில் உள்ள 7 மலைக் கிராமங்கள் உட்பட 29 கிராமங்கள் இந்நிலைய கட்டுப்பாட்டில் உள்ளன. மத்திய அரசின் பேரிடர் கால நிதி ரூ.2.45 கோடி புதிய கட்டடம் கட்டவும், நவீன உபகரணங்கள் வாங்கவும் அனுமதிக்கப்பட்டது.

நகருக்குள் உள்ள இடங்களை தர நகராட்சியும், வருவாய்த் துறையும் தயாரில்லை. இதனால் நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும், இடத்தை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்தது. இதனால் அந்நிதியை திருப்பி அனுப்பும் அவல நிலை ஏற்பட்டது.

சின்னமனுார் வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள இடம், ‘ஊருணி’ என்று கூறி வருவாய்த்துறை தயக்கம் காட்டுகிறது.

வெள்ளையம்மாள்புரம் கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள இடத்தில் 50 சென்ட் இடம் தருவதாக வருவாய்த் துறை கூறியுள்ளது.

சின்னமனுார் நகருக்குள் மூன்று இடங்களை தீயணைப்புத்துறை சுட்டிகாட்டியுள்ளது.

அந்த இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை ஒதுக்கினால் சின்னமனுார் தீயணைப்பு நிலையம் என்று பெயர் இருக்கும்.

இல்லையென்றால் நகரின் வெளியே 5.கி.மீ., துாரத்தில் நகராட்சி கட்டடம் அமைந்துவிடும்.

இந்நகராட்சி இதில் கவனம் செலுத்தி தீயணைப்பு நிலையத்தை சின்னமனுாருக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இதுகுறித்து நகராட்சி தலைவர் கேட்டதற்கு, ‘நகருக்குள் நகராட்சிக்கு சொந்தமான இடம் இல்லை.

வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்கள் தான் உள்ளன. வருவாய்த்துறை இடம் ஒதுக்க வலியுறுத்துகிறோம்.’, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *