பாலியல் வழக்கு : 60 நாட்களில் விசாரணை முடிக்க வேண்டும்; முதன்மை மாவட்ட நீதிபதி பேச்சு
பெரியகுளம : பாலியல் வன்கொடுமை வழக்குகளை போலீஸ் ஸ்டேஷன்களில் 60 நாட்களில் விசாரணை முடிக்க வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் பேசினார்.
தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம்,சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு நடத்திய ‘ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்’ விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் துவங்கியது.
முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன், எஸ்.பி., சிவபிரசாத் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., சுகுமார், டி.எஸ்.பி., நல்லு, நீதிபதிகள் அனுராதா, சரவணக்குமார், கமலநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சரளா, கல்லூரி முதல்வர் சேசுராணி, அரசு வழக்கறிஞர் இசக்கிவேல் மற்றும் மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவிகள் கவிபிரியா, பவித்ரா, பிரியதர்ஷினி தனிப்பட்ட கேள்விகளுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி கூறுகையில்: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் 60 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும். சிறுமிகள் திருமணம் உட்பட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்பவங்களை கல்லூரி மாணவிகள், சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கூறியவர்கள் பெயர் ரகசியம் காக்கப்படும். பள்ளி அருகே மதுகடைகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இன்ஸ்பெக்டர்கள் முத்துபிரேம்சந்த், கீதா உட்பட போலீசார் பங்கேற்றனர்.ஏ.டி.எஸ்.பி., கனகராஜ் நன்றி கூறினார்.