தனியார் சொகுசு பஸ் மோதி இரு குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்; டிரைவர் தலைமறைவு
தேனி : கம்பத்தில் இருந்து சென்னை சென்ற சொகுசு பஸ் மோதியதில் இரு குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தலைமறைவான டிரைவர் ராம்குமாரை சின்னமனுார், வீரபாண்டி போலீசார் தேடி வருகின்றனர்
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை உத்தமபாளையம் இ.பி. காலனி ராம்குமார் 30, ஓட்டினார். பஸ் சீலையம்பட்டி செல்லாயி அம்மன் கோயில் அருகே சென்ற போது, கோட்டூர் ஆலமரத்தெரு சிங்காரவேல் 35, ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் சிங்காரவேல், அவரது மகள் ஜனனிப்பிரியா 5, மகன் தஷ்வந்த் 3, காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் நிற்காமல் சென்றது.
உத்தமபாளையம் கன்னிசேர்வைபட்டி பாண்டித்துரை 31, அவருடன் உறவினர்கள் வினோதினி 31, சந்திரமோகன் 43, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு சென்று காரில் வீடு திரும்பினர். கோட்டூர் அருகே சென்ற போது விபத்தை ஏற்படுத்திய சொகுசு பஸ், இவர்கள் கார் மீதும் மோதியது. காரில் இருந்தவர்கள் காயமடைந்தனர். நிற்காமல் சென்ற பஸ் மேலும் பல வாகனங்களில் மோதிய நிலையில், பஸ்சை கோட்டூர் பஸ் ஸ்டாப் அருகே நிறுத்தி விட்டு டிரைவர் ராம்குமார் தப்பி ஓடினார். இருவேறு இடங்களில் ஒரு பஸ்சினால் ஏற்பட்ட விபத்துகள் பற்றி சின்னமனுார், வீரபாண்டி போலீசார வழக்கு பதிந்து, டிரைவரை தேடி வருகின்றனர்.