உத்தமபாளையத்தில் பக்தர்கள் புலம்பல் : தேரோட்டத்திற்கு தேதி குறித்து ம் ரோடு சீரமைக்காமல் அலட்சியம்
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் நடத்த தேதி முடிவு செய்திருக்கும் நிலையில் பேரூராட்சி அலட்சியத்தால் தோரோடும் வீதி சீரமைக்காமல் உள்ளது.தேர் பராமரிப்பு பணி துவங்கால நிலை உள்ளது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் திருப்பணி, கும்பாபிஷேக காரணங்களால் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்தாண்டு மாசி மாத தேரோட்டம் நடத்த ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகளும், ஊர் பொதுமக்களும் முடிவு செய்துள்ளனர்.
நகரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகாக வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு ரத வீதிகளில் பள்ளம் தோண்டியதில் தெருவை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ரோடு சீரமைக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இன்று வரை ரோடு பராமரிப்பு செய்ய எந்த அறிகுறியும் இல்லை.
இது பற்றி ஹிந்து சமய அறநிலைய துறையும் மவுனம் காத்து வருகிறது.
காளாத்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் இளஞ்செழியன் பணி ஓய்வுக்கு பின் செயல் அலுவலர் நியமிக்கவில்லை. ஆண்டிபட்டி,கம்பம் செயல் அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்தனர். தற்போது பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் செயல் அலுவலர் சுந்தரி கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேரோட்டம் மார்ச் 12 ல் முடிவு செய்துள்ள நிலையில் ரோடு பராமரிப்பும், தேர் பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. ரோடு பராமரிப்பு பணிக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி கூறுகிறது. ஆனால் மதிப்பீடு தயாரித்தல், டெண்டர் கோருதல், நிர்வாக அனுமதி பெறுதல், வேலை செய்ய அனுமதி வழங்குதல் என எந்த பணியும் பேரூராட்சி தரப்பில் மேற்கொள்ளவில்லை.
எனவே, தேரோட்டம் நடைபெற ரோடு பராமரிப்பு, தேர் பராமரிப்பு பணிகள் விரைந்து முடிக்க அரசு உத்தரவிட வேண்டும்.