Sunday, October 26, 2025
மாவட்ட செய்திகள்

ஊராட்சிகளில் மாற்றுத் திட்டம் தேவை காணாமல் போன திடக்கழிவு மேலாண்மை திட்டம்

கம்பம் : ‘திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஊராட்சிகளில் முடங்கிய நிலையில், சுகாதாரம் பாதுகாக்க மாற்று திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.’ என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உள்ளாட்சிகளில் சேகரமாகும் குப்பையை மக்கும், மக்காத குப்பை என வீடுகளுக்கே நேரில் சென்று பிரித்து வாங்க வேண்டும். மக்கும் குப்பையில் இருந்து, நுண் உரக் கூடங்கள் மூலம் இயற்கை உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்வது என்றும், மக்காத குப்பையை பிளாஸ்டிக் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள், சிமிண்ட் ஆலைகளுக்கு அனுப்புவதும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த திட்டத்திற்கு என, முதலில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. குப்பையை பிரிப்பதற்கு ஒரு வளாகம், மண்புழு உரம் தயாரிக்க ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்த அலுவலர்கள், படிப்படியாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும், எந்த ஊராட்சியிலும், இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட வில்லை. இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட குப்பை தொட்டிகள், பேட்டரி கார்கள், தரம் பிரிக்கும் மையங்கள், நுண் உரக் கூடங்கள் பயனற்ற நிலையில் வீணாக காட்சிப் பொருளாக உள்ளன.

ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பையை ஊருக்கு வெளியில் கொண்டு போய் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஊராட்சிகளில் குப்பை தேக்கமில்லை. ஆனால் சுற்றுப்புறச்சூழல்

பெரிய அளவில் மாசு பட்டு வருகிறது.

ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை காணாமல் போய் விட்டது. நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் படிப்படியாக காணாமல் போக துவங்கியுள்ளது. ஊராட்சிகளில் போதிய எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாதது இந்த திட்டம் செயல்படாததற்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே திட்டத்தை மேம்படுத்தி சூழல் பாதுகாப்புடன் இணைந்த சுகாதார மேலாண்மையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *