மாவட்டத்தில் குடிநீர் பகுப்பாய்வு மையம் அமைக்க வலியுறுத்தல்
கம்பம் : மாவட்டத்தில் குடிநீர் பகுப்பாய்வு மையங்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வது உள்ளாட்சி அமைப்புகளின் கடமையாகும். ஆனால் குடிநீரை பகுப்பாய்வு செய்யும் மையங்கள் இல்லை. நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டும் ஆண்டிற்கு 3 முறை குடிநீர் பரிசோதனை செய்யப்படுகிறது
குடிநீரை முறையாக பகுப்பாய்வு செய்ய தமிழகத்தில் சென்னை கிண்டி, திருநெல்வேலி, கோவை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் மட்டுமே பகுப்பாய்வு மையங்கள் உள்ளது. அங்கும் போதிய பணியாளர்கள் இல்லை. இந்நிலையில் தான் 12,545 ஊராட்சிகள், 159 பேரூராட்சிகளில் இருந்து குடிநீர் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு இம் மையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவற்றை முறையான பரிசோதனை செய்ய சாத்தியமில்லை. குடிநீர் வாரியம் விநியோகிப்பது மட்டுமே எங்கள் பணி, பரிசோதனை செய்வது பொதுச் சுகாதாரத்துறையின் பணி என்று வாரியம் கூறிவிட்டது.
எனவே தற்போது மாவட்டந்தோறும் பொதுச் சுகாதாரத்துறையின் கீழ் குடிநீர் பகுப்பாய்வு மையங்கள் அமைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், பேரூராட்சி, ஊராட்சிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை ஆண்டிற்கு 3 முறை பரிசோதிக்க பகுப்பாய்வு மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றனர்.