தேவதானப்பட்டி வட்டார சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துங்க: 24 மணிநேரமும் சிகிச்சை பெறும் வசதி வேண்டும்
தேவதானப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, மஞ்சளாறு, ராசிமலை, காமக்காபட்டி, அட்டணம்பட்டி உட்பட 50 கிராமங்களிலிருந்து தினமும் 200 பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு 30படுக்கைகளுடன் உள்நோயாளிகள் பிரிவு, ஆப்பரேஷன் தியேட்டர், புறநோயாளிகள் பிரிவு உள்ளன. இங்கு வட்டார மருத்துவ அலுவலர் உட்பட 5 டாக்டர்கள் உள்ளனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வு பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. மீதமுள்ள 4 டாக்டர்களில் ஒருவர் தொடர் விடுப்பில் உள்ளார்.
எஞ்சிய 3டாக்டர்களில் மாலை 5 மணிக்கு மேல் யாரும் பணியில் இருப்பது இல்லை. இதனால் கடந்த காலங்களில் மாதம் 30 பிரசவங்கள் நடந்த நிலையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் 15 ஆக குறைந்தது.
தேவதானப்பட்டி வழியாக திண்டுக்கல் -குமுளி பைபாஸ் ரோடு செல்கிறது. அதிக போக்குவரத்துள்ள இந்த ரோட்டில் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு இங்கு சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை.
விபத்தில் பாதிக்கப்படுவோர் ஆம்புலன்ஸ் மூலம் 20 கி.மீ.,துாரமுள்ள தேனி மருத்துவக்கல்லுாரி, அல்லது 10 கி.மீ.துாரமுள்ள பெரியகுளம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
உயிர்காக்க வேண்டிய முக்கிய நேரத்தில் பல கி.மீ.,துாரம் துாக்கி சென்று சிகிச்சை அளிப்பதற்குள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அசாதாரண சூழல் உள்ளது. எனவே, தேவதானப்பட்டி வட்டார சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படும் தாலுகா மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது.
பொன்னையா, சமூக ஆர்வலர், நல்லகருப்பன்பட்டி: தேவதானப்பட்டி வட்டார சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் சுற்றியுள்ள கிராம மக்கள் அவசரத்திற்கு சிகிச்சை பெறமுடியாமல் மக்கள் சிரமம் அடைகின்றனர். கடந்த வாரம் கெங்குவார்பட்டியை சேர்ந்த ஒருவர் பாம்பு கடித்து வட்டார சுகாதார நிலையம் வந்த போது முதலுதவி சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லை.
பெரியகுளம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து தேனி மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வழியில் இறந்தார். உரிய சிகிச்சை அளிக்காததால் பரிதாபமாக உயிர் பலியானது.
எனவே, தேவதானப்பட்டி வட்டார மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.