வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியம்
வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க அனைத்து தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
மூணாறைச் சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களில் 14 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் பல்வேறு தொழிற் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிலாளர்கள் சார்பில் நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா, ஐ.என்.டி.யு.சி. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.மணி மற்றும் முனியாண்டி, ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் அவுசேப், பழனிவேல், காமராஜ், சி.ஐ.டி.யு. சார்பில் ஷாஜி, லெட்சுமணன், இந்திய கம்யூ., மண்டல செயலாளர் சந்திரபால் உள்பட பலர் பங்கேற்றனர். அதில் தொழிலாளர்கள் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தோட்ட அதிகாரிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஒரு நாள் ஊதியம் வழங்கும் பட்சத்தில் ரூ.70 லட்சம் நிதி கிடைக்கும். அதனை முதல்வர் பினராயிவிஜயனிடம் வழங்கப்படும் என தொழிற்சங்க பிரமுகர்கள் தெரிவித்தனர்.
3மாத பென்ஷனை நிதியாக வழங்கல்: மூணாறை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மணி. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு தன்னுடைய எம்.எல்.ஏ. மூன்று மாத பென்ஷன் தொகையை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.