மலை மாடுகளை தீவன பிரச்னை தீர்க்க மலைகளில் மேய்ச்சலுக்கு அனுமதியுங்கள் பல்கலை தலையிட வலியுறுத்தல்
கம்பம்: வனப் பகுதியில் பாரம்பரிய மலைமாடுகளை மேய்ச்சலுக்கு வனத்துறை அனுமதிக்க வேண்டும். கால்நடைகளின் தீவன பிரச்னையில் தேனி கால்நடை பல்கலை தலையிட்டு தீர்வுகாண மலைமாடுகள் வளர்ப்போர் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்ட மலையோர கிராமங்களில் பல ஆண்டுகளாக பல ஆயிரம் மலைமாடுகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் மலைகளுக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர்.
மலை மாடுகள் மூலம் வன விலங்குகளுக்கு நோய் பரவல், மரகன்றுகள் சேதம் என்ற பிரச்னை எழுந்ததால் வனத்துறை மாடுகளை மேய்ச்சலுக்கு மலைகளுக்குள் அனுமதிப்பதில் பிரச்னை ஏற்பட்டது.
மேலும் மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின், வனத்துறையின் கெடுபிடிகள் அதிகரித்தது. 2006 ல் வனத்துறையினர் மேய்ச்சலுக்கு அனுமதி சீட்டு வழங்கி, வனப்பகுதிக்குள் அனுமதித்தனர். 2020 க்கு பின் வனத்துறை கெடுபிடிகள் மேலும் அதிகரித்துள்ளது.
இப் பிரச்னையில் பலபோராட்டங்கள் நடத்தியும், மனுக்கள் கொடுத்தும் பலனில்லை.
சின்ன ஒவுலாபுரம் மலைமாடுகள் வளர்ப்பவர்கள் கூறுகையில், மலைமாடுகளின் தீவன பிரச்னை அதிகரித்து வருகிறது.
மாடுகள் வளர்க்க முடியாத நிலை உருவாகி உள்ளது. வனத்துறையினர் வரைமுறைகளை ஏற்படுத்தி, குறிப்பிட்ட சில பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்கலாம் என்கின்றனர்.
தீராத தீவன பிரச்னை
பாரம்பரியமலைமாடுகள் வளர்ப்பவர்கள் கூறுகையில், நாட்டு மாடுகள் ஒராண்டு முதல் மூன்றாண்டுக்கு ஒருமுறை கன்றுபோடும் பசுக்கள் உள்ளது. 100 மலைமாடுகள் இருந்தாலும் காளை 2 மட்டுமே இருக்கும். நாட்டு மாடு ஒரு நாளைக்கு 2 லிட்டர் மட்டுமே பால் தரும். மருத்துவ குணம் கொண்ட பாலை பெரும்பாலும் விற்க மாட்டோம். நோயாளிகளுக்கு கொடுப்போம். ஆனால் தீவன பிரச்னை தீராத பிரச்னையாக உள்ளது. கால்நடை பல்கலை நாட்டு மாடுகளை பாதுகாக்கவும், அங்கீகாரம் பெற்றுத்தரவும் முயற்சிக்கிறது. ஆனால் நாட்டு மாடுகளுக்கு தீவன பிரச்னையை பல்கலை கண்டு கொள்வதில்லை.
தேனி கால்நடை பல்கலை வனத்துறையினருடன் பேச வேண்டும். மரபு சாரா தீவன உற்பத்தி பற்றி விளக்கினாலும், உற்பத்தியில் பல பிரச்னைகள் உள்ளது. எனவே மேய்ச்சலுக்கென வனப்பகுதிக்குள் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கின்றனர்.