பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
பஹல்காம் தாக்குதலின் போது என்ன நடந்தது என்பதை அதை நேரில் கண்ட சாட்சி ஒருவர் முழுமையாக விவரித்துள்ளார். ஜிப்லைன் ஆபரேட்டர், அல்லாஹூ அக்பர்’ என்று மூன்று முறை கூறியபிறகே துப்பாக்கிச்சூடு தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது பஹல்காம் தீவிரவாத தாக்குதல். 26 சுற்றுலா பயணிகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் எழுந்துள்ளது. போர் மூளும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதோடு, எல்லைகளில் பாதுகாப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் தாக்குதல் சம்பவத்தின் போது உண்மையிலேயே என்ன தான் நடந்தது? தான் பார்த்தது என்ன என்பதை அங்கிருந்து உயிர் தப்பிய ஒருவர் நேரடியாக விளக்கி உள்ளார். இவரின் பெயர் ரிஷி பட். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்தவர்.
தாக்குதல் சம்பவத்தின் போது ரிஷி பட் ஜிப்லைனில் சென்றிருக்கிறார். அப்போது நடந்த சம்பவம் குறித்து அவர் கூறிய விவரங்கள் வருமாறு;
நான் ஜிப்லைனில் (ஜிப்லைன் என்பது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஆகாயத்தில் தொங்கியபடி செல்லும் முறை ஆகும். இது ஒரு களிப்பூட்டும் அம்சம் அல்லது சாகச விளையாட்டு எனலாம். அந்தரத்தில் கம்பியின் மூலம் தொங்கிச் செல்வதால் கீழே தரை தளத்தில் நடப்பவற்றை எளிதாக பார்க்கலாம்) தொங்கிக் கொண்டு செல்லும் போது தான் துப்பாக்கிச்சூடு தொடங்கியது.
20 நொடிகள் என்ன நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை. திடீரென துப்பாக்கியால் சுடப்படும் சம்பவங்கள் தொடங்கின. நான் தொங்கிக் கொண்டு இருக்கும் போது கீழே புல்தரையில் இருந்த மக்கள் கொல்லப்படுவதை பார்த்தேன்.
5 அல்லது 6 பேர் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டேன். 20 நொடிகளுக்கு பின்னரே இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதை உணர்ந்தேன்.
ஜிப்லைனை இயக்கும் ஆபரேட்டர் அல்லாஹூ அக்பர் என்று 3 முறை கூறினார். அதைத் தொடர்ந்தே துப்பாக்கிச்சூடு தொடங்கியது. எங்களுக்கு முன்னால் இருந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களை மதம் என்னவென்று கேட்டு என் மனைவி, மகன் முன்னிலையில் சட்டுக் கொன்றதை நான் கண்டேன்.
என் மனைவி, மகன் கத்திக் கொண்டு இருந்தார்கள். உடனே நான் எனது பெல்ட்டை அவிழ்த்து, ஜிப்லைனில் இருந்து கீழே குதித்து அவர்களை அழைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன்.
பள்ளமான ஒரு இடத்தில் மக்கள் பலர் ஒளிந்திருப்பதை பார்த்தேன். அவர்கள் யார் என்பது தெரியவில்லை. நாங்களும் அங்கேயே ஒளிந்து கொண்டோம். 8 முதல் 10 நிமிடங்களுக்கு பிறகு துப்பாக்கியால் சுடும் சத்தம் நின்றது.
அதன் பின்னர் நாங்கள் பிரதான வாயிலை நோக்கி ஓட ஆரம்பித்தோம். மீண்டும் துப்பாக்கிச்சூடு தொடங்கியது. 4, 5 பேர் சுடப்பட்டனர். எங்கள் முன் 15,16 சுற்றுலாப் பயணிகள் சுடப்பட்டனர். நாங்கள் வாயிலை அடைந்தவுடன், உள்ளூர் மக்கள் முன்னரே வெளியேறி விட்டதை கண்டோம்.
குதிரை ஓட்டுபவர் ஒருவர் எங்களை அங்கிருந்து அழைத்துச் சென்றார். அதன் பின்னரே இந்திய ராணுவ வீரர்களை கண்டோம். அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் அவர்கள் பாதுகாப்பு அளித்தனர்.
பஹல்காம் பகுதியை 20, 25 நிமிடங்களுக்குள் ராணுவத்தினர் அரணாக சுற்றி வளைத்து சுற்றுலா பயணிகளை காப்பாற்றினர். ராணுவம் எங்களுக்கு பாதுகாப்பு அளித்தவுடன் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தோம். ராணுவத்திற்கு எனது நன்றி.
எனக்கு முன்பாக 9 பேர் ஜிப்லைனில் சென்றனர். அப்போது அதை இயக்குபவர் எதுவும் சொல்லவில்லை. நான் சறுக்கிச் செல்லும்போது அவர் பேசினார். அதன் பின்னரே துப்பாக்கிச்சூடு தொடங்கியது.
ஆகையால் அந்த மனிதன் (ஜிப்லைன் ஆபரேட்டர்) மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அல்லாஹூ அக்பர் என 3 முறை கூறினார். பின்னரே துப்பாக்கிச் சூடு தொடங்கியது. அவர் ஒரு வழக்கமான காஷ்மீரியை போல்தான் எனக்கு தெரிந்தார்.
சம்பவம் நடக்கும் போது பிரதான இடத்தில் எந்த ராணுவ அதிகாரியும் இல்லை. காவல்துறையினரும், பிரதான வாயிலில் மூன்று பாதுகாப்பு காவலர்களும் இருந்தனர்.
இவ்வாறு அவர் விவரித்தார்.