ஊராட்சி எழுத்தர் சஸ்பெண்ட் ஆட்சி குழு நடவடிக்கை
மூணாறு : மூணாறு ஊராட்சியில் ஆட்சி குழு முடிவுபடி பிரச்னைக்குரிய எழுத்தர் பணியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
மூணாறு ஊராட்சியில் எழுத்தராக பணியாற்றியவர் ரெஜி. இவர், பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுமக்கள், ஊராட்சி உறுப்பினர்கள், சக ஊழியர்கள் ஆகியோரிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும், ஆங்கில புத்தாண்டு அன்று இரவில் மூன்று ஊழியர்களை தாக்கியதுடன் கொலை செய்ய முயன்றதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக மூணாறு போலீசில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புகார் அளித்தனர்.
அவர் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டதால், அவரை 1997ம் ஆண்டு கேரள பஞ்சாயத்துராஜ் சட்டப்படி பணியில் இருந்து ‘ சஸ்பெண்ட்’ செய்வதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி குழு முடிவு செய்தது.
அதன்படி ரெஜி பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஊராட்சி தலைவர் தீபாராஜ்குமார், துணைத்தலைவர் பாலசந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.