சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எத்தனை ஆன்மிக சொற்பொழிவில் விளக்கம்
கம்பம்: ‘சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எத்தனை என்று கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ‘சிவராத்திரி மகிமை’ என்ற தலைப்பில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில், ஆன்மிக பேச்சாளர் மோகனவேலு பேசினார்.
அவர் பேசியதாவது: உபவாசம் என்ற சொல்லுக்கு உள்ளத்தை இறைவனுக்கு அருகில் வைத்தல் என்பது பொருளாகும். இறை வழிபாடு செய்வதால் செல்வம், உடல் நலம், நீண்ட ஆயுள் கிடைக்கும். சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. கார்த்திகையில் வரும் கார்த்திகை சோமவாரம், மார்கழியில் வரும் ஆருத்ரா தரிசனம், தைப்பூசம்(பாசுபத விரதம்), மாசியில் வரும் மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், வைகாசி அஷ்டமி, ஐப்பசியில் வரும் கேதார நோன்பு முதலியன முக்கியமானவைகளாகும். சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், ஒரு கோடி ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கும். அன்றைய தினம் செய்யும் ஒரு வழிபாட்டிற்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். ‘சங்கரன்’ என்ற நாமத்திற்கு, ‘ஆன்மாக்களுக்கு சுகத்தை செய்பவன்’ என்பது பொருள். பார்வதி தேவி இரவு நேரத்தில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்த நாள் சிவராத்திரி. மதுரையில் உள்ள சொக்கநாதரை வழிபட்டு இந்திரன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார். பார்வதிதேவி கேட்க, சிவபெருமான் சிவ ஆகமங்களை உபதேசித்த நாள். பிரம்மா, விஷ்ணு இருவரும் ஜோதி வடிவில் சிவனை கண்ட நாள்
ஒரு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் மூன்று ஜென்ம பாவங்கள் நீங்கும். இந்த புண்ணிய நாளில் சிவபெருமானின் பெருமை கூறும் புராணங்களை படிப்பதும், கேட்பதும், சொல்வதும் நன்மை பயக்கும். இவ்வாறு பேசினார். திரளான பக்தர்கள் இதனை கேட்டு, பூஜையில் பங்கேற்றனர்.