பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தியே தீருவோம் – அமைச்சர் பெரியசாமி உறுதி
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்தியே தீருவோம் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
தேனி மாவட்டம், லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் அமைச்சர் கூறியது: தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் பென்னி குவிக்கிற்கு அரசு சார்பில் லண்டனில் சிலை அமைத்து நேரில் சென்று திறந்து வைத்தோம்.
அணையில் 136 அடியில் இருந்து 142 அடி உயர்த்துவதற்கான தீர்ப்பை பெற்றுத் தந்தது தி.மு.க., அரசு. அணை பலமாக உள்ளது என பல்வேறு பொறியியல் நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து சான்று வழங்கியுள்ளது. பேபி அணையை பலப்படுத்தியபின் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 152 அடியாக உயர்த்தியே தீருவோம் என்றார்.