பருத்திக்கு போதிய விலை இன்றி விவசாயிகள் கவலை
போடி : போடி பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக போதிய மழை இல்லாததால் பருத்தி விளைச்சல் பாதித்து விலை குவிண்டால் ஆயிரம் ரூபாய் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
போடி அருகே அம்மாபட்டி, சில்லமரத்துப்பட்டி, பத்திரகாளிபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, சுந்தரராஜபுரம், ராசிங்காபுரம் உள்ளிட்ட பகுதியில் 2000 ஏக்கரில் பருத்தி பயிரிட்டு உள்ளனர். இப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக போதிய மழை இல்லை. இதனால் பருத்தி செடியில் காய்கள் வளர்ச்சி இன்றியும், விளைச்சல் பாதித்துள்ளது.
பருத்தி விவசாயிகள் கூறுகையில் : கடந்த ஆண்டு பருத்தி நல்ல விளைச்சல், விலையும் இருந்தது. குவிண்டால் ரூ.7000 முதல் ரூ.8000 வரை விலை இருந்தது. கடந்தா மூன்று மாதங்களாக போதிய மழை இல்லாமல் மகசூல் பாதித்துள்ளது. தற்போது குவிண்டால் ரூ.6000 ஆக விலை குறைந்து உள்ளது. இந்த விலை விதை, நடவு, மருந்தடிப்பு, எடுப்பு கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்றனர்.