கண்ணகி கோயிலுக்கு பளியன்குடி வழியாக ரோடு வசதி- எதிர்பார்ப்பு; பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா
கூடலுார்: தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற 4 மாதங்கள் உள்ள நிலையில் பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக ரோடு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளன
தேனி மாவட்டம் கூடலுார் பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலுக்கு செல்ல லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., துார தமிழக வனப் பாதை உள்ளது. இது தவிர கேரளா குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கி.மீ., தூரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டும் இங்கு விழா கொண்டாடப்படும். இக்கோயிலுக்கு செல்ல ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் கேரளாவின் அனுமதியுடன் பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தமிழக வனப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்கள் அதிகமாக நடந்து செல்ல முடியாமல் கேரள வனப்பாதையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கேரள வனத்துறையின் கெடுபிடிகளுடன் தமிழக பக்தர்கள் கோயிலுக்கு சென்று திரும்புகின்றனர். அதனால் தமிழக வனப்பகுதி வழியாக ரோடு அமைத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என தமிழக பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சர்வே பணி
தமிழக வனப்பகுதி வழியாக கோயிலுக்கு வாகனங்களில் செல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் ரோடு இருந்துள்ளது. காலப்போக்கில் அவை சீரமைக்காததால் நடைபாதையாக மாறியது. 35 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கோயில் வரை ரோடு அமைக்க தமிழக அரசால் சர்வே பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர் நடவடிக்கை இல்லாததால் அப்பணியும் முடக்கப்பட்டது. சமீபத்திலும் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வே பணிகள் நடந்தன. ரோடு அமைக்க பளியன்குடி வழியாக 6.6 கி.மீ., தூரமும், தெல்லுக்குடி வழியாக 3.6 கி.மீ., தூரமும் உள்ளது. இதில் ரோடு அமைக்கும் நடவடிக்கை எடுத்தால் பக்தர்கள் சுதந்திரமாக சென்று கண்ணகி அம்மனை வழிபட்டு வருவார்கள்.
எதிர்பார்ப்பு
இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா மே 12ல் கொண்டாடப்படுகிறது. நான்கு மாதங்கள் உள்ள நிலையில் தமிழக அரசு விரைவில் ரோடு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். இக்கோயிலுக்கு தேனி மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி பிற மாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி விழாவிற்கு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் விழா நடப்பதற்கு முன்பு கேரள மாநிலம் தேக்கடிக்கு சென்று இரு மாநில கலெக்டர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். இந்த ஆண்டு இக்கூட்டத்தை தமிழகப் பகுதியில் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.