ஜல் ஜீவன் இணைப்பு பெற்றும் குடிநீர் வழங்காததால் மக்கள் தவிப்பு
தேனி : ‘ஜல்ஜீவன்’ திட்ட இணைப்புகள் பொருத்தப்பட்டும், குடிநீர் வினியோகம் இல்லாததால் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் மக்கள், தார்ரோடு அமைக்கப்படாத ரோடுகளால் போக்குவரத்திற்கு சிரமம், மழை காலங்களில் மண் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தேங்கும் நீரால் குடியிருப்புப் பகுதிக்கு சென்று திரும்புவதில் சிக்கல், மின்கம்பங்கள் இருக்கு, ஆனால் தெருவிளக்குகள் இல்லை.’ என, பல்வேறு அடிப்படை வசதி குறைபாடுகளால் தேனி ஊாஞ்சாம்பட்டி ஊராட்சி முதல், 2வது வார்டுகளை சேர்ந்த சிவபாலாஜி, ஊஞ்சாலம்மன் நகர் பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
இவ்வூராட்சியில் அமைந்துள்ள இப்பகுதி, விரிவாக்கப்பகுதியில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வளர்ச்சித்திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. ‘ஜல்ஜீவன்’ திட்ட இணைப்புகள் இங்குள்ள 60 குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. ஆனால் குடிநீர் சப்ளை வழங்கப்படாததால், விலைக்கு வாங்கி குடிநீரை பொது மக்கள் பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது.
இருளில் மூழ்கும் தெருக்கள் வீருகுமார், ஊஞ்சாலம்மன் நகர்: தேனி பெரியகுளம் மெயின் ரோட்டில் இருந்து இப்பகுதியின் நுழைவாயில் பகுதியில் மண் ரோடு துவங்குகிறது. அங்கிருந்து ஊஞ்சாலம்மன் நகர், சிவபாலாஜி நகர் பகுதிகள் வரை மொத்தம் 18 மின்கம்பங்கள் உள்ளன. இவை சீரான இடைவெளியில் இல்லை. மேலும் இப்பகுதியில் எந்த மின்கம்பங்களிலும் தெரு விளக்குகள் பொருத்தவில்லை. மின்வாரியம் இதுகுறித்து ஆய்வு செய்ய வில்லை.
இதனால் இரவு நேரத்தில் இந்த விரிவாக்கப்பகுதி முழுவதும் இருளில் மூழ்குகிறது. உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்து தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.