வீரர்களுடன் களமாட தயாராகும் தேனி காளைகள் காளை பார்வைக்கு முரடன், பழக்கத்திற்கு குழந்தை ஜல்லிக்கட்டு
தேனி: ஜல்லிக்கட்டு போட்டிகளில் வீரர்களுடன் களமாட தயராகும் தேனி காளைகளுக்கு தினமும் முட்டல், நீச்சல், நடை பயிற்சி வழங்கி வருகின்றனர்.
இக் காளை பார்வைக்கு முரடன். பழக்கத்திற்கு குழந்தை போல் வளர்ப்பவருடன் பழகும் என்கிறார் பயிற்சியாளர்.
தை பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நினைவிற்கு வரும்.
இப் போட்டிகளுக்காக ஜல்லிக்கட்டு களை வளர்க்கும் இளைஞர்கள் காளைகளை தயார்படுத்துவதை தற்போது முழு நேர பணியாக கவனிப்பார்கள். தேனி மாவட்டத்தில் அல்லிநகரம், ஊஞ்சாம்பட்டி, வீரபாண்டி, சின்னமனுார், அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, அமச்சியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தேனி அம்மச்சியாபுரம் அருகே இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மண் முட்டுதல், நீச்சல், நடை, ஓட்ட பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
குன்னுார் செங்குளம் கண்மாயில் நீச்சல் பயிற்சி வழங்கி வருகின்றனர். காளைகளுக்கு வழங்கும் பயிற்சி பற்றி இளைஞர்கள் கூறியதாவது:
தினமும் விதவிதமான பயிற்சி
தயானந்த், பயிற்சியாளர் அம்மச்சியாபுரம்:ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக இரு மாதங்களுக்கு முன்பிருந்து காளைகளுக்கு தினமும் பயிற்சி வழங்க துவங்குவோம்.
இக் காளைகள் மாவட்டத்தில் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னலுார் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசு வென்றுள்ளது. பயிற்சி காலத்தில் குச்சி புண்ணாக்கு, தவிடு, கம்பு மாவு, இரு நாட்களுக்கு ஒரு முறை ஒருகிலோ பேரிச்சை பழங்கள் தீவனத்துடன் கலந்து உணவாக வழங்குகிறோம். கேடி என்ற பெயர் கொண்ட செவலைக்காளை ஜல்லிகட்டு களம் இறங்கினால் பக்கத்தில் யாரையும் நெருக்க விடாது.
ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை பந்தாடாமல் திரும்ப வராது.காளைகளை சிரமப்பட்டு தயார் செய்கிறோம் ஆனால் களம் காண டோக்கன் பெறுவது சிரமமாக உள்ளது.
பரிசுகளை குவித்த காளைகள்
முத்தையா, காளை உரிமையாளர், அம்மச்சியாபுரம்:ஜல்லிக்கட்டிற்காக நான்கு காளைகளை வளர்க்கிறேன்.
எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கிறது. மணீஸ் என்ற காளை பார்க்கும் போது முரடனாக தெரியும், பழகுபவர்களிடம் குழந்தை போல் சாந்தம்
இந்த காளைகள் பல ஊர்களுக்கு சென்று பரிசுகளை குவிந்துள்ளது.
காளையை பராமரிப்பவர்கள் தான் தினமும் தீவனம் கொடுக்க வேண்டும்
பழகாதவர்கள் அருகில் செல்ல முடியாது. தினமும் 2 மணிநேரத்திற்கு மேலாக பயிற்சி வழங்குகிறோம். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும். என்றார்