ஊராட்சி, பேரூராட்சிகளில் பயன்பாடின்றி பூங்காக்கள் முடக்கம்: விளையாட்டு திடல் இன்றி இளைஞர்கள் பரிதவிப்பு
தேனி: மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் பல பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. ‘நம்ம ஊரு விளையாட்டு திடல்’ திட்டமும் செயல்படுத்தப் படாததல் இளைஞர்கள் விளையாட்டுகளை மறந்து அலைபேசி, போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு ஊராட்சிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் விளையாட்டு உபகரணங்கள், அம்மா உடற்பயிற்சி கூடங்கள், நடைபயிற்சி பாதைகள், கழிப்பறை வசதியுடன் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது இந்த பூங்காக்கள் பல ஊர்களில் முடக்கப்பட்டன.
இதனால் பல பூங்காக்களில் அமைக்கப்பட்டு இருந்த விளையாட்டு உபகரணங்கள் திருடு போயின. பல சேதமடைந்துள்ளன. சில பூங்காக்கள் திறக்கப்படாததால் புதர்மண்டி குப்பை மேடாக காட்சியளிக்கின்றன.
தேனி அருகே முல்லைநகர், வீரபாண்டி பேரூராட்சி பகுதி மாரியம்மன் கோயில்பட்டி ரோட்டில் உள்ள பூங்கா, போடி பகுதியில் உள்ள பூங்கா என பல்வேறு பூங்காக்கள் இந்த நிலை நீடிக்கிறது.
ஆட்கள் நடமாட்டம் இல்லாததல் இந்த பூங்காக்கள் விஷ பூச்சிகள், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகின்றன. செயல்படாத பூங்காக்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அருகே வசிக்கும் குடியிருப்போர் வலியுறுத்துகின்றனர்.
செயல்படாத ‘நம்ம ஊரு விளையாட்டு திடல்’ திட்டம் மைதனாங்கள் இல்லாத ஊராட்சிகளில் பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை இணைந்து நம்ம ஊரு விளையாட்டு திடல் அமைக்க ஆக., 2023ல் அரசு உத்தரவிட்டது. ஆனால் தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தில் எந்த ஊராட்சியிலும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
மைதானங்கள் இருந்தவரை கிரிக்கெட், கபடி, வாலிபால், கால்பந்து என இளைஞர்கள், மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
தற்போது போதிய அளவில் மைதானங்கள் இல்லாததல் அலைபேசி, போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் முடங்கிய பூங்காக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஊராட்சிகளில் மைதானங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.