மேகமலையில் உறைபனி இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கம்பம்: மேகமலை பகுதியில் உறைபனி நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.
தேனி மாவட்ட சுற்றுலா தலங்களில் மேகமலை பகுதி முக்கிய இடம் பிடிக்கிறது. மூணாறுக்கு நிகராக சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
பசுமையான தேயிலை தோட்டங்கள் ஹைவேவிசில் ஆரம்பித்து மணலாறு வரை ரோட்டை ஒட்டியே நீண்டு செல்லும் நீர் தேக்கமும், மலைமுகடுகளை தொட்டு செல்லும் மேக கூட்டங்களும், அணை பகுதிக்கு வரும் யானை, காட்டு மாடுகள் கூட்டமும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த சாரல் தற்போது இல்லை. எனவே உறைபனி நிலவுகிறது. கடந்த சில நாட்களாக பனி மூட்டமும் அதிகமாக உள்ளது. இரவு மட்டுமல்லாமல் மதியம் 12:00 மணி வரையும் பனிமூட்டமாக உள்ளது. ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து வெறிச்சோடி உள்ளது. இங்குள்ள அணைகளில் சேகரமாகும் தண்ணீரை பயன்படுத்தி தேவைக்கேற்ப காலை, மாலையில் சுருளியாறு மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.