தேனி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணிகள் ஸ்பீடு
ஆண்டிபட்டி, ஜன. 10: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தினமும் சுமார் 2 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை மேற்கொள்வதற்காக 20 படுக்கைகளுடன் அவசர சிகிச்சை வார்டு செயல்பட்டு வருகிறது
இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் கூடுதல் வசதிகளை மேற்கொள்ளும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் கட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘தரைத்தளம் உள்ளிட்ட 3 மாடி கட்டிடத்தில் 50 படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த புதிய அவசர சிகிச்சை பிரிவு கூடுதல் கட்டிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்’’ என்றனர்.