அரசின் இலவச சேலைகள் உற்பத்தி திட்டம் நிறைவு : பெடல் தறிகளில் பள்ளி சீருடை துணி உற்பத்தி துவக்கம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தாலுகா, சக்கம்பட்டியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் பெடல் தறிகளில் அரசின் பள்ளி சீருடை துணிகள் உற்பத்தி திட்டம் துவங்கி உள்ளது. நடப்பு ஆண்டில் தைப்பொங்கலுக்கான அரசின் இலவச சேலைகள் உற்பத்தி முழுமை பெற்றதால் சீருடை துணிகள் உற்பத்தி தற்காலிகமாக துவக்கப்பட்டுள்ளது.
சக்கம்பட்டியில் உள்ள 7 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கைத்தறிகளை நவீனமாக்கும் திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மூலம் கைத்தறிக்கு பதில் நெசவாளர்களுக்கு பெடல் ரக தறிகள் வழங்கப்பட்டன. பெடல் தறிகள் மின் மோட்டார் மூலம் இயக்கப்படுவதால் நெசவாளர்கள் கூடுதலாக உற்பத்தி செய்யமுடிகிறது. இப்பகுதி நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசின் இலவச சேலைகள் உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நடப்பு ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் சேலைகளை டிசம்பரில் உற்பத்தி செய்து முடித்து விட்டனர். அடுத்த ஆண்டுக்கான இலவச சேலைகள் உற்பத்தி திட்டம் அரசு இன்னும் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பெடல் தறிகளில் தற்போது பாலியேஸ்டர் நூல்களில் பள்ளி சீருடை துணிகள் உற்பத்தியை துவக்கி உள்ளனர்.
2.70 லட்சம் மீட்டர் சீருடை துணி உற்பத்தி
கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் கூறியதாவது: சக்கம்பட்டியில் தற்போது 270 பெடல் தறிகள் செயல்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை ஒரு லட்சத்து 37 ஆயிரம் இலவச சேலைகள் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்தில் முடிந்துள்ளது. அடுத்த உற்பத்தி திட்டம் அரசு மூலம் மார்ச் மாதத்திற்கு பின்பே கிடைக்கும். நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு மூலம் 2 லட்சத்து 70 ஆயிரம் மீட்டர் பள்ளி சீருடைத்துணிகள் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உற்பத்தி செய்ய உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் இலவச சேலை உற்பத்தி செய்ய 5.5 மீட்டருக்கு ரூ.96.40 நெசவாளர்களுக்கு கூலியாக வழங்கப்படுகிறது. ஒரு மீட்டர் நீளம் பள்ளி சீருடைத்துணிகள் உற்பத்தி செய்ய நெசவாளர்களுக்கு கூலியாக ரூ.12.73 நிர்ணிக்கப்பட்டுள்ளது.
பெடல் தறிகளில் பள்ளி சீருடை துணிகள் உற்பத்தியால் கூட்டுறவு சங்க நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.