Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு குழுவில் கேரள அதிகாரிகளை நீக்க வலியுறுத்தி முற்றுகை

கூடலுார்; முல்லைப் பெரியாறு அணையில் இன்று (மார்ச் 22) ஆய்வு மேற்கொள்ள வரும் புதிய மத்திய கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள 2 கேரள அதிகாரிகளை நீக்க வலியுறுத்தி பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் எல்லைப்பகுதியான குமுளி லோயர்கேம்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அணையில் போராடவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் உள்ளன. ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

2022ல் எர்ணாகுளம் ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 12 மாதத்திற்குள் முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்தது. 2024 அக்., 1 முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டன.

புதிய கண்காணிப்பு குழு

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய மத்திய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மங்கித் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பிரியேஸ் மற்றும் இரு தொழில்நுட்ப வல்லுநர்கள் என 7 பேர் உள்ளனர்.

விவசாயிகள் முற்றுகை

இக்குழுவில் கேரள அரசு சார்பில் இடம்பெற்ற 2 அதிகாரிகளை நீக்க வலியுறுத்தி நேற்று பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் மனோகரன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், கவுரவ தலைவர் சலேத்து தலைமையில் லோயர்கேம்ப் பஸ் ஸ்டாண்டில் இருந்து குமுளி நோக்கி விவசாயிகள் ஊர்வலமாக

சென்று முற்றுகையிட முயன்றனர். பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையில் போலீசார் நிறுத்தினர். அங்கு கேரள அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அணையில் போராட முடிவு

ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது: கேரள அதிகாரிகளை நீக்கும் வரை போராட்டத்தை தொடருவோம். 2006, 2014 உச்சநீதிமன்ற தீர்ப்பை எதற்காக அமல்படுத்தவில்லை. கேரள அரசின் கெடுபிடியால் அணையை பராமரிக்க முடியவில்லை. பராமரிக்காத அணையை எப்படி ஆய்வு செய்ய முடியும். அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னிலையில் அணையில் பராமரிப்பு பணிகள் நடத்திய பின் ஆய்வு நடத்தட்டும். மீறி ஆய்வு மேற்கொண்டால் அணைக்கு சென்று போராடுவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *