Sunday, October 26, 2025
மாவட்ட செய்திகள்

ஏழு மணி நேரம் காத்திருக்கும் ரயிலை மதுரைக்கு இயக்க எதிர்பார்ப்பு! கூடுதல் ரயில்களின் சேவை தேவை

மாவட்டத்தில் போடியில் இருந்து மதுரைக்கு அமைக்கப்பட்ட ரயில் பாதை மாநிலத்தில் மிகவும் பழமையான ரயில் பாதையாகும்.

மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 2022ல் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது மதுரை முதல் போடிக்கு இருமார்க்கத்திலும் ஒரு பாசஞ்சர் ரயில் தினசரி இயக்கப்படுகிறது.

போடி முதல் சென்னை வழிதடத்தில் இருமார்க்கத்திலும் வாரத்தில் மூன்று நாட்கள் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தென்தமிழகத்தில் மதுரை இதயப் பகுதியாக உள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மதுரை அருகில் உள்ள திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களுக்கு நாள் முழுவதும் 15க்கும் மேற்பட்ட ரயில்களும், ராமநாதபுரத்திற்கு தினசரி 3 பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ஆனால் தேனி மாவட்டத்திற்கு ஒரே ரயில் அதுவும் காலை மட்டும் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் போடி ரயில் நிலையத்திற்கு காலை 10:30 மணிக்கு வருகிறது. மீண்டும் மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்கிறது. போடி ரயில் நிலையத்தில் மட்டும் 7:00 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த ரயிலை மீண்டும் மதுரைக்கு அல்லது வேறு பகுதிகளுக்கு இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதே போல் சென்னை ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும், காலை நேரத்தில் போடியில் இருந்து மதுரைக்கு ரயில் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரயில் பயணிகளிடம் அதிகரித்துள்ளது.

ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலை நீட்டிக்க வேண்டும்

ஜி.பிலிப் விக்டர், கவுரவ ஆலோசகர், கார்டமம் சிட்டி ரயில் பயணிகள் சங்கம், போடி : மதுரையில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலை போடியில் இருந்து காலை 5:00 மணிக்கு புறப்படும் வகையில் நடவடிக்கை வேண்டும். இதனால் காலை நேரத்தில் இந்த ரயிலில் சென்றால் வைகை அதிவிரைவு, வந்தே பாரத் ரயில், கோவை இன்டர்சிட்டி, செங்கோட்டை பாசஞ்சர், நாகர்கோயில் அந்தியோதயா ரயில்களில் பயணிக்கலாம்.ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் ரயில்களை போடி வரை நீட்டிக்க வேண்டும். மதுரை-போடி வழித்தடத்தில் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணிவரை தண்டவாள பராமரிப்பு பணி நேரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

மின்வழித்தடத்தை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பயண நேரத்தை குறைக்க ரயில்வேதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *