கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் காணும் பொங்கல் ஒரே நாளில் நுழைவு கட்டணம் ரூ. ஒரு லட்சம் வசூல்
பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒரே நாளில் நுழைவு கட்டணம் ரூ. ஒரு லட்சம் வசூலானது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி பாம்பார்புரம், வட்டக்காணல் மற்றும் கும்பக்கரை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. தற்போது தண்ணீர் வரத்து சீராகவும் அதே நேரத்தில் வேகமாகவும் இருந்தது.
நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை 7:45 மணிக்கு அருவிப்பகுதிக்கு செல்வதற்கு தயாராகினர்.
காலை 8:00 மணிக்கு நுழைவு கேட் திறக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.20 வீதம் வசூலிக்கப்பட்டது. அருவியின் நுழைவு பகுதியிலிருந்து 500 மீட்டர் நடந்து சென்ற சுற்றுலா பயணிகள் இருபுறமும் பசுமையாக வளர்ந்துள்ள மரங்களை ரசித்தபடியே சென்றனர். அருவியின் மேற்பகுதி நீரோடை பகுதி மற்றும் அருவிப்பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிர்ந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். கும்பக்கரை அருவியில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று பிற நாட்களை விட அதிக அளவில் கூட்டம் வரும். ஒரே நாளில் வசூல் ரூ.ஒரு லட்சத்தை தாண்டியது.–