கண்ணகி கோயில் தெல்லுக்குடி பாதையை பார்வையிட சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்
கூடலுார்:தமிழக — கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக செல்லும் தெல்லுக்குடி பாதையை பார்வையிட சென்ற விவசாயிகளையும், கண்ணகி கோயில் பாதை மீட்பு குழுவினரையும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தேனி மாவட்டம் கூடலுார் பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலுக்கு செல்ல லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., துார தமிழக வனப் பாதை உள்ளது. இது தவிர கேரளா குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கி.மீ., துாரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று இங்கு விழா கொண்டாடப்படும். இக்கோயிலுக்கு செல்ல ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் கேரளா அனுமதியுடன் பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தமிழக வனப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்கள் அதிகமானோர் நடந்து செல்ல முடியாமல் கேரள வனப்பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கேரள வனத்துறை கெடுபிடிகளுடன் தமிழக பக்தர்கள் கோயிலுக்கு சென்று திரும்புகின்றனர்.
அதனால் தமிழக வனப்பகுதியில் உள்ள பளியன்குடி வழியாக 6.6 கி.மீ., துாரமும், தெல்லுக்குடி வழியாக 3.6 கி.மீ., துாரமும் உள்ள பாதையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ரோடு அமைக்க நடவடிக்கை
எடுத்தால் பக்தர்கள் சுதந்திரமாக சென்று கண்ணகி அம்மனை வழிபட முடியும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழக வனப்பாதை அமைக்க வலியுறுத்தி அரசுக்கு மனு அனுப்புவதற்காக கண்ணகி கோயில் பாதை மீட்புக் குழுவை சேர்ந்த முத்துராமலிங்கம், முருகன், முல்லைச்சாரல் விவசாய சங்கத்தைச் சேர்ந்த கொடியரசன், ஜெயபால், ராஜா ஆகியோர் நேற்று ஊமையன் தொழு அருகே உள்ள தெல்லுக்குடி பாதையை பார்வையிடச் சென்றனர். தமிழக வனத்துறையினர் இவர்களுக்கு அனுமதி வழங்காததால் ஊமையன் தொழு மற்றும் பளியன்குடி வரை சென்று திரும்பினர்.
பாதை விரைவாக அமைக்க வலியுறுத்தி அரசுக்கு மனு அனுப்ப உள்ளதாகவும், தாமப்படுத்தினால் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
வனத்துறையினர் கூறும் போது
திடீரென வனப்பகுதிக்குள் செல்ல யாரையும் அனுமதிக்க முடியாது. அரசின் ஒப்புதலோடு அதிகாரிகளுடன் சென்றால் மட்டுமே அனுமதிக்க முடியும்’ என்றனர்.