Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

பஸ் ஸ்டாண்டில் கூடுதல் கட்டணத்தால் கலங்கும் பயணிகள்; கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி புது பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பறைகளில் நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகுகின்றனர். இதே நிலை பல மாதங்களாக தொடர்ந்தாலும் நகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்

இந்நகராட்சி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்ட் மாவட்ட தலைநகர் பகுதியில் அமைந்துள்ளது. தேனி, தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் மட்டும் இன்றி கேரள மாநிலத்தவர்களும் அதிகம் பயன்படுத்தும் பஸ் ஸ்டாண்ட் ஆகும்.

இந்த பஸ் ஸ்டாண்ட்டில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் தலா இரு கட்டண கழிப்பறைகள் செயல்படுகின்றன. இங்கு எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்ற கட்டண பலகை ஒரு இடத்தில் கூட இல்லை.

மேலும் ஒவ்வொரு பயணியிடமும் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இலவச சிறுநீர் கழிப்பிடம் உள்ள பகுதி ஆள்நடமாட்டம் இன்றி காணப்படுவதால் ரூ.10 செலுத்தி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பஸ் ஸ்டாண்டில் பல ஆய்வுகள் மேற்கொள்ளும் நகராட்சி அதிகாரிகள், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டு கொள்வது இல்லை.

நகராட்சி அதிகாரிகள் கட்டணம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *