கடும் பனியால் வெற்றிலை கொடிகள் கருகி உதிர்கிறது க ருப்பு வெற்றிலை விலை உயர்வு
சின்னமனூர்,: வெற்றிலை கொடிகள் அதிக மழை மற்றும் பனி காரணமாக பழுத்து கருகி உதிர்ந்து வருகிறது. இதனால் கருப்பு வெற்றிலை விலை உயரத் துவங்கி உள்ளது.
எந்தவொரு மங்களகரமான நிகழ்வாக இருந்தாலும் அங்கு வெற்றிலை இடம்பெறும். மாவட்டத்தில் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, கம்பம், சீலையம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் வெற்றிலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பெரியகுளத்தில் வெள்ளை,வெற்றிலையும், சின்னமனுாரில் கருப்பு வெற்றிலையும் சாகுபடியாகிறது. நடவு செய்த 4 வது மாதத்தில் பலன்பெறலாம். இரு ஆண்டுகளுக்கு பலன் தரும். ஆண்டிற்கு 25 முறை வெற்றிலை பறிக்க முடியும்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்தது. தற்போது பனிப்பொழிவால் குளிர் நிலவுகிறது. இதனால் வெற்றிலை கொடிகளில் நீர் கோர்த்து பழுத்து உதிர்ந்து வருகிறது. இதனால் கருப்பு வெற்றிலை வரத்து குறைந்துள்ளது.
கடுமையான வெப்பம் நிலவினாலும் கொடிகள் கருகி, மகசூல் பாதிக்கப்படும்.இதனால் வெற்றிலை தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. வெற்றிலை தட்டுப்பாடு ஏற்பட்டதால் விலையும் அதிகரித்துள்ளது.
கருப்பு வெற்றிலை கிலோ ரூ.160 ல் இருந்து ரூ.190 வரை உயர்ந்துள்ளது. ஆனால் வெள்ளை வெற்றிலை கடந்த 50 நாட்களாக கிலோ ரூ.280ல் மாற்றமில்லாமல் உள்ளது.
வெற்றிலை சாகுபடியாளர் ரவி கூறுகையில் , 75 சதவீத வெற்றிலை தோட்டங்களில் மழை,பனி காரணமாக கொடிகள் கருகி உள்ளது. கருப்பு வெற்றிலை கிலோவிற்கு ரூ.30 உயர்ந்துள்ளது என்றார்.