ஆற்றில் அடித்து சென்ற கார் பாதிரியார் உயிர் தப்பினார்
தொடுபுழா அருகே நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதிரியார் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் கன மழைக்கான ‘ ஆரஞ்ச் அலர்ட்’ முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பகலில் மழை சரிவர பெய்யவில்லை. இரவு 8:00 மணி முதல் மாவட்டத்தில் தொடுபுழா உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடுபுழா அருகே வண்ணப்புரம் ஊராட்சியில் பெய்த பலத்த மழையில் முள்ளிரிங்காடு, வெள்ளக்கயம் உள்பட பல பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. ஓடை, ஆறு ஆகியவற்றில் மண் கலந்த காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மண் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதாக மக்கள் அஞ்சினர்.
இந்நிலையில் முள்ளரிங்காடு பகுதியில் லூர்துமாதா சர்ச் அருகில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ரோட்டில் ஓடியது. அப்போது இரவு 8:30 மணிக்கு சர்ச்சை நோக்கி சென்ற பாதிரியார் ஜேக்கப்வட்டப்பிள்ளியின் கார் ஆற்று நீரில் சிக்கிக் கொண்டது. அப்பகுதியினர் காரில் இருந்த பாதிரியாரை மீட்ட நிலையில் கார் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டது.