போடியில் பட்டாசு வெடிக்க தடை விதி மீறினால் ரூ.5000 அபராதம்
போடி: போடி நகராட்சி பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தும், நிபந்தனைகள் மீறுபவர்களுக்கு ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது
போடி நகராட்சி பகுதியில் திருமணம், காதுகுத்து, வசந்த விழா, துக்க சம்பவம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கும் பட்டாசு வெடிப்பது வழக்கமாகி வருகிறது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வெடிப்பதால் முதியோர், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
பட்டாசு வெடித்தபின் ரோட்டில் சேரும் பேப்பர் கழிவுகளால் ரோடே குப்பையாக மாறுகிறது.சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போடி நகராட்சி பகுதியில் கோர்ட், கோயில், பள்ளி, மருத்துவமனை, குடிசை பகுதி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் பட்டாசு வெடிக்க முழுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது.
பேப்பர், கலர் காகிதங்கள் அதிக ஒலி, அதிக புகை வெளியிடும் பட்டாசுகளுக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
நிகழ்ச்சிகள் நடக்கும் மண்டபம், வீடுகள் முன்பு பட்டாசு வெடிக்க நகராட்சி முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். நிபந்தனைகள் மீறும் நபர்களுக்கு ரூ.5000 நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். தொழில் நிறுவனங்களாக இருப்பின் அதன் உரிமம் ரத்து செய்யப்படும்.
நிகழ்ச்சிகள் நடைபெறுவது மண்டபமாக இருந்தால் மண்டப உரிமையாளரிடமும், வீட்டில் நடைபெறுவதாக இருந்தால் விசேஷம் நடத்துபவரிடம் சேவை கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளன.