பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு – மின் உற்பத்தி குறைந்தது
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் மழையின்றி வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவை குறைத்து அணையில் நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இருந்த போதிலும் நீர்திறப்பை குறைக்காமல் தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1100 கன அடி தொடர்ந்து திறந்து விடப்பட்டிருந்தது.
இந்நிலையில்கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் நீர்வளத்துறை அதிகாரிகள், தேனி தங்கதமிழ்செல்வன் எம்.பி.,யிடம் நீர்திறப்பை குறைக்க கோரி மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஜன.11ல் 931 கன அடியாக குறைக்கப்பட்டது. அதன்பின் நேற்று காலை 6:00 மணிக்கு 667 கன அடியாக மேலும் குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 122.45 அடியாக உள்ளது(மொத்த உயரம் 152 அடி).
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 234 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 3113 மில்லியன் கன அடியாகும். நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 83 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 60 ஆக குறைந்தது.