Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

பெரியகுளம் நகர்புற சுகாதார நிலையத்தில் பிரசவங்கள் குறைவு; கூடுதல் பெண் டாக்டர் நியமிக்க வலியுறுத்தல்

பெரியகுளம்: பெரியகுளம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், நர்ஸ், மருந்து மாத்திரை உள்ளிட்ட வசதிகள் இருந்தும் பிரசவங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பெரியகுளம் வடுகபட்டி ரோட்டில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 53 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு ஒரு டாக்டர், 5 செவிலியர்கள் உள்ளனர். நகராட்சி 30 வார்டில் இருந்து தினமும் நூற்றுக்கும் அதிகமான கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்தி கொள்வது, குழந்தைகளுக்கு தடுப்பூசி, வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு,

நாய் கடி தடுப்பூசி பணிகள் நடைபெறும். நகரின் மத்தியில் மருத்துவமனை உள்ளதால் எளிதாக வந்து செல்கின்றனர். இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும். கடந்த ஆண்டுகளில் மாதம் 20 முதல் 30 சுகப்பிரசவங்கள் நடந்தது. தற்போது மாதம் 3 பிரசவங்கள் என குறைந்துள்ளது.

முந்தைய காலங்களில் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் நர்ஸ்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்தால் கிடைக்கும் நன்மைகள், உடல்நலம் குறித்து பேசி தன்னம்பிக்கை ஏற்படுத்துவர். தற்போது இது பற்றி யாரும் பேசுவதில்லை. பிரசவம் நடந்தால் என்ன, குறைந்தால் என்ன நமக்கு சம்பளம் வந்து விடுகிறது என்ற ரீதியில் பணியாற்றுகின்றனர். இதனால் பிரசவம் வெகுவாக குறைந்து விட்டது.

டாக்டர் பற்றாக்குறை: இங்கு ஒரு பெண் டாக்டர் உள்ளார். இரவில் டாக்டர் இருப்பது இல்லை என பிரசவத்திற்கு கர்ப்பிணிகள் வர தயங்குகின்றனர். கூடுதலாக ஒரு பெண் டாக்டர் நியமித்தால் நம்பிக்கையுடன் கர்ப்பிணிகள் அதிகம் வருவார்கள். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆண் பயிற்சி டாக்டர்கள் வருகின்றனர். கர்ப்பிணிகள் அவர்களிடம் சந்தேகம் கேட்க தயங்குகின்றனர். பெண் பயிற்சி டாக்டர்கள் வரவேண்டும்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நகர்புற நல வாழ்வு திட்டத்தின் கீழ் வெளிநோயாளிகளுக்கான கூடுதல் கட்டடம் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதில் வெளிநோயாளிகளை அனுமதிக்காமல் பூட்டி வைத்து நர்ஸ்கள் ஓய்வு எடுக்கும் அறையாக மாற்றி உள்ளனர்.

பிரசவ வார்டில் படுக்கைகள் உள்ள ஜன்னல் ஓரம் களைச் செடிகள் வளர்ந்துள்ளது இதனால் கொசுத்தொல்லை, விஷ பூச்சி நடமாட்டம் உள்ளது இதனால் இங்கு வரும் ஒன்றிரண்டு கர்ப்பிணிகளும் அடுத்து வர தயங்குகின்றனர். எனவே, ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *