கம்பம் , உத்தமபாளையம் கோயில்களில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலி
கம்பம் : கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில்களுக்கு செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நியமனம் செய்வது எப்போது என்பது தெரியவில்லை
மாவட்டத்தில் பிரசித்தி பெற்றகோயில்களில் கம்பம் கம்பராயப் பெருமாள்,காசி விஸ்வநாதர் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில்கள் உள்ளன. இரண்டு கோயில்களிலும் தினமும் பக்தர்கள் அதிகம் வந்து தரிசனம் செய்கின்றனர்.
காளதீஸ்வரர் கோயிலில் செயல் அலுவலராக இருந்த இளஞ்செழியன் பணி ஓய்வு பெற்று ஓராண்டு ஆகிறது. இதுவரை செயல் அலுவலர் நியமிக்கவில்லை. கூடுதல் பொறுப்பாக கம்பம் செயல் அலுவலர் அருணா தேவி கவனித்து வந்தார். கடந்த மாதம் அவர் விடுமுறையில் சென்றதால், சின்னமனூர் செயல் அலுவலர் நதியா கம்பத்திற்கும், ஆண்டிபட்டி செயல் அலுவலர் ஹரிஷ் குமார் உத்தமபாளையத்திற்கும் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கம்பம் கோயில் செயல் அலுவலர் அருணா தேவி விடுமுறை முடிந்து பணியில் சேர்ந்தார்.நதியா கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
உத்தமபாளையத்தை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த ஆண்டிபட்டி செயல் அலுவலர் ஹரிஷ் குமார், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கம்பத்தில் பணியாற்றிய அருணா தேவி மதுரை அழகர் கோயிலிற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால் கம்பம் மற்றும் உத்தமபாளையம் கோயில்களில் செயல் அலுவலர் இல்லாத நிலை உள்ளது.
உத்தமபாளையம் கோயிலில் அடுத்த மாதம் தேரோட்டம் நடைபெற உள்ளது. கம்பம் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் உரிய அதிகாரிகள் இல்லாததால் தேரோட்ட முன்னோட்ட பணிகளும், கம்பம் கோயிலில் திருப்பணிகள் தாமதமாகி வருகிறது. இக்கோயில்களுக்கு செயல் அலுவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.