பணியாளர்கள் , நிர்வாக அலட்சியத்தால் மின்சாரம் விரயமாகிறது: தெரு விளக்குகள் பராமரிப்பில் உள்ளாட்சிகள் மெத்தனம்
ஆண்டிபட்டி:’ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளின் நிர்வாகம், பணியாளர்களின் அலட்சியத்தால் குறிப்பிட்ட நேரத்தில் தெரு விளக்குகள் அணைக்கப்படுவது இல்லை. பகலில் எரியும் தெரு விளக்குகளால் மின்சாரம் விரயம் ஆவதுடன், உள்ளாட்சி நிர்வாகங்களின் இந்த மெத்தனப் போக்கால், மின் கட்டணச் செலவும் அதிகரித்துள்ளது. இதனை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மின்வாரியம் மூலம் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.’ என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள், ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்சார செலவை குறைப்பதற்காக தெரு விளக்குகளில், ‘டியூப் லைட்’க்கு மாற்றாக எல்.இ.டி., பல்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொறுத்தப்பட்டன. ஒவ்வொரு வார்டுகளிலும் தெரு விளக்குகளை சுவிட்ச் ஆப், சுவிட்ச் ஆன் செய்வதற்கு பணியாளர்கள் உள்ளனர். மாலை 6:00 மணிக்கு ஆன் செய்யப்படும் விளக்குகள் மறுநாள் காலை 6:00 மணிக்கு ‘ஆப்’ செய்யப்படுவது வழக்கம். சில இடங்களில் காலையில் தெரு விளக்குகளை ‘ஆப்’ செய்யாமல், விட்டு விடுகின்றனர். பகல் முழுவதும் எரிவதால் மின்சாரம் விரயமாகிறது. இதுகுறித்து அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தால் ‘ஆப்’ செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. யாரும் புகார் தராத பட்சத்தில் பகலில் எரியும் தெரு விளக்குகள் ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்படுவது இல்லை.
தன்னார்வலர்கள் சிலர் கூறியதாவது: ஆண்டிபட்டி பேரூராட்சியில் 1200க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. மின்சார செலவை குறைக்கும் நடவடிக்கையில் 650 தெரு விளக்குகளில் எல்.இ.டி., பல்புகள் பொருத்தப்பட்டு உள்ளன. 600 தெரு விளக்குகளில் எல்.இ.டி., பல்புகள் பொருத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் பணி துவங்கவில்லை. இதனால் மின்சார செலவு அதிகமாகிறது. கிராம ஊராட்சிகளில் குக்கிராமங்களின் எண்ணிக்கைக்கு தக்கபடி 100 முதல் 200 தெரு விளக்குகள் உள்ளன.
தெரு விளக்குகள் மூலம் மின்சாரம் விரயமாவதை தவிர்க்க உள்ளாட்சி நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கலெக்டர் மின்வாரியம் மூலம் தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றனர்.