Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

போடி -மூணாறு ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பால பணி சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் தினமும் அவதி

போடி: போடி – புதூர் பாலத்தில் இருந்து முந்தல் செல்லும் ரோட்டில் ஒரு கி.மீ., தூரத்திற்கு ரூ. 45 கோடி செலவில் ரோடு அகலப்படுத்துதல், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிவடையாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

தமிழக, கேரளா பகுதியை இணைக்கும் முணாறு செல்லும் வழித்தடமாக போடி – முந்தல் ரோடு அமைந்து உள்ளது.

இந்த ரோட்டில் கேரளா பகுதியான மூணாறு மட்டும் இன்றி குரங்கணி, கொட்டகுடி, முட்டம், முதுவாக்குடி, டாப்ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளும் விவசாயிகளும் தினம் தோறும் ஏராளமான வாகனங்களில் சென்று வருகின்றனர். போடி – புதூர் பாலத்தில் இருந்து ரயில்வே கேட் வரை ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கடைகள், வீடுகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டன.

இதனை தவிர்க்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.45 கோடி செலவில் போடி புதூர் பாலத்தில் இருந்து ஒரு கி.மீ., தூரம் வரை 100 அடி அகல ரோடாக மாற்றும் வகையில் ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றபட்டன.

16 இடங்களில் பாலம், தடுப்புச் சுவர்கள் அமைப்பதற்காக ரோட்டோரத்தில் இருந்த மா, தென்னை மரங்கள், கடைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் துவங்கி 2 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. 100 அடி அகல ரோடு இருந்தும் தார்ரோடாக மாற்றாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலால் சிரமம்

செல்வம், சமூக ஆர்வலர், போடி : போடி – மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் தமிழக கேரளா சுற்றுலா பயணிகள், விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் பஸ், கார், ஜீப் உட்பட ஏராளமான வாகனங்களில் சென்று வருகின்றனர்.

மதுரை – போடி ரயில் வரும் போதும், திரும்பும் நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்படுகிறது. அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்க ரயில்வே மேம்பாலம், ரோடு அகலப்படுத்தும் பணி துவங்கப் பட்டன.

2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிவடையாமல் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், சிரமம் அடைந்து வருகின்றனர் . வாகனங்கள் வேகமாக வரும் போது, தூசி பறந்து கண்களில் விழுந்து அவதிக்குள்ளாவதோடு அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.

தீர்வு

போடி -மூணாறு ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி நிரந்தர தீர்வுக்கு ஆமை வேகத்தில் நடந்து வரும் ரயில்வே மேம்பாலம், ரோடு அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *