Thursday, July 24, 2025
மாவட்ட செய்திகள்

விதையில்லா திராட்சைக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு: வட மாநிலங்களில் மகசூல் பாதித்து வரத்து குறைவு

கம்பம்: வடமாநில விதையில்லா திராட்சை வரத்து மிகவும் குறைந்து வரும் நிலையில், ஓடைப்பட்டி பகுதியில் விளையும் விதையில்லா திராட்சைக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பன்னீர் திராட்சைக்கும் விலை கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் சுருளிப்பட்டி, காமயக் கவுண்டன்பட்டி, அணைப்பட்டி, சுருளி அருவி, ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் திராட்சை சாகுபடியாகிறது. கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சை, ஓடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது. இருப்பினும் 90 சதவீத பகுதிகளில் பன்னீர் திராட்சையே பிரதானமாக சாகுபடியாகிறது.

ஆண்டுதோறும் நவம்பர் இறுதியில் வடமாநிலங்களில் இருந்து விதையில்லா திராட்சை தமிழகத்திற்கு வரத்து துவங்கும். தொடர்ந்து மார்ச் இறுதி வரை வரத்து நீடிக்கும். அந்த காலகட்டங்களில் கம்பம் பள்ளத்தாக்கு திராட்சைக்கு விலை இருக்காது. இந்தாண்டு நவம்பரில் வர வேண்டிய வட மாநில விதையில்லா திராட்சை வரத்து, தற்போது ஜனவரியில் தான் துவங்கியது. அதுவும் மிக குறைவான அளவே வருகிறது. காரணம் வட மாநிலங்களில் தேவையில்லாத மழை காரணமாக திராட்சை மகசூல் கடுமையாக பாதிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட மாநிலங்களில் இருந்து விதையில்லா திராட்சை வரத்து குறைவாக இருப்பதால், கம்பம் பன்னீர் திராட்சைக்கு விலை கிடைத்து வருகிறது. கிலோ ரூ.50 வரை உள்ளது. ஆனால் நேற்று முன்தினம் முதல் மழை பெய்வதால், விற்பனை மந்த நிலையில் நடந்தது.

இதுகுறித்து ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை முன்னோடி விவசாயி கலாநிதி கூறுகையில், ‘வட மாநிலங்களில் பெய்த மழை காரணமாக இந்தாண்டு விதையில்லா திராட்சை வரத்து குறைந்துள்ளது. எனவே ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை ஏப்ரலில் வரும் போது விலை கிடைக்க வாய்ப்புள்ளது. மழை நின்று விட்டால், நல்ல விலை கிடைக்கும். வரத்து குறைந்த நிலையில்  கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்குமா என்ற எதிர்ப்பார்பிலும் விவசாயிகள் உள்ளனர்.’, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *