வீடுகளில் மின்கசிவு விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்
பெரியகுளம் ; வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க ஆர்.சி.டி., அல்லது ஆர்.சி.சி.பி., ‘சர்க்யூட் பிரேக்கர்’ பொருத்த வேண்டும் என மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.
பெரியகுளம் வடகரை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்சாரம் பயன்பாடு, பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
செயற்பொறியாளர் பாலபூமி தலைமை வகித்தார். மின் நுகர்வோர்கள், கட்டட பொறியாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். செயற்பொறியாளர் கூறியதாவது: வீடுகளில் மின் இணைப்பு சர்வீஸ் மெயின் பாக்ஸ் அருகே, மின் பாதுகாப்பு சாதனமான ஆர்.சி.டி., அல்லது ஆர்.சி.சி.பி., ‘சர்க்யூட் பிரேக்கர்’ பொருத்த வேண்டும்.
இதனால் வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கலாம். ஈரக்கையால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது. பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, இஸ்திரி பெட்டி போன்றவற்றில் எர்த் உடன் கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளக் பாயிண்ட்களில் மின்சார ஒயர்களை பிளக்கு உபயோகிக்காமல் பயன்படுத்த கூடாது. இவைகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். குழந்தைகளை சுவிட்ச் போடச் சொல்லி விளையாட்டு காட்டுதல் கூடாது.
விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது குற்றம். இடி, மின்னல், காற்று மற்றும் மழை காலங்களில் மின்கம்பங்கள், மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம் என்றார்.