போலீசார் பற்றாக்குறையால் திணறும் டிராபிக் பிரிவு : தேனி டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் நவீன முறையில் மேம்படுத்துங்கள்:
தேனி: மாவட்ட தலைநகரான தேனியில் நாளுக்குள் நாள் அதிகாரிக்கும் வாகனப் போக்குவரத்ததை சீரமைக்கவும், விபத்துக்களை தவிர்க்கும் டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் நவீனப்படுத்தி போலீசார் எண்ணிக்கை 60 வரை உயர்த்திட வேண்டும் போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 2011ல் இங்கு 94,311 பேர் வசித்தனர். தற்போது தேனிக்கு தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அதற்கேற்ற வகையில் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பழக்கம் குறைந்ததால் டூவீலர், கார்கள், சைக்கிள், பேட்டரி வாகனங்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், லாரி என அனைத்து வாகன பயன்பாடுகளும் அதிகரித்துவிட்டன. தேனியில் கடந்த 10 ஆண்டுகளில் 1.20 லடசம் வாகனங்கள் பதிவு செய்துள்ளனர்.ஆட்டோக்கள் மட்டும் 1600 இயங்குகிறது.
திணறும் போலீசார்:
தேனி டிராபிக் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், சிறப்பு எஸ்.ஐ.,க்கள், நிலைய எழுத்தர் என, 16 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். தினசரி டிராபிக் பணி, வி.ஐ.பி., விசிட் பாதுகாப்பு, விபத்து நடந்த இடங்களில் கண்காணிப்பு, காலை, மாலை பள்ளி நேரங்களில் வாகன நெரிசலை தவிர்த்தல், விதிமீறும் வாகனங்கள் மீது அபராதம் விதிப்பது என, பல்வேறு பணிகளை சுழற்சி முறையில் பார்த்து வருகின்றனர். சபரிமலை சீசன் நாட்களில் 24 மணிநேர போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். குறைந்தளவு டிராபிக் போலீசாரை வைத்து போக்குவரத்தை முறைப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
‛டிராபிக்’ போலீசார் கூறுகையில், ‛மாவட்டத் தலைநகராக இருப்பதால் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அமைச்சர்கள் வருகை, அரசு விழாக்கள், நிகழ்வுகள், வி.ஐ.பி.,க்கள் வந்து செல்லும் போது பாதுகாப்பு வழங்குகிறோம். அந்த நேரத்தில் விபத்து நடந்தால் அங்கும் நாங்கள் செல்ல வேண்டி உள்ளது. காலையில் ரோல் கால் நேரத்தில் வருவது முதல் கூடுதல் நேரம் பணியை பார்த்து மன உளைச்சலில் தவிக்கிறேம். மேலும் தற்போதுள்ள ஸ்டேஷனில் கோப்புக்களை கூட வைக்க இடம் இல்லை. இதனால் புதிய இடத்தில் ‛டிராபிக்’ போலீஸ் ஸ்டேஷன் அமைக்கவும், போலீசார் எண்ணிக்கை 60 ஆக உயர்த்த எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.’, என்றனர்.