குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்: கலெக்டர் தகவல்
தேனி, ஜன.22: தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் வருகிற குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம், கிராம ஊராட்சி செயல் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) ஆகியோரால் நடத்தப்பட உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி 5ம் தேதி வரை உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் பதவியில் இருந்து கிராம சபைக் கூட்டங்களை நடத்தினர்.
தற்போது ஊராட்சி மன்றத் தலைவர்களின் பதவிக்காலம் முடிந்ததால் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. எனவே, 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை சிறப்பாக நடத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இக்கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளுக்கான குறைகளை தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.