போடியில் விபத்துக்களை தடுக்க சாலை பாதுகாப்பு குழு ஆய்வு
போடி : போடியில் சாலை விபத்துக்களில் உயிர்பலி அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட சாலை பாதுகாப்பு குழுக்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில் 2023 ம் ஆண்டை விட 2024 ம் ஆண்டில் விபத்துக்கள், உயிர் பலி அதிகரித்துள்ளது. விபத்துக்கள் அதிகரிக்க காரணம், அதை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் ஷஜீவனா தலைமையில் சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேனி, போடி, உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மெயின் ரோடுகளில் விபத்து குறித்த அறிவிப்பு பலகை, வேகத்தடை, தடுப்புகள், அடிக்கடி விபத்து நடக்கும் இடம், இறப்பு காரணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தயாரிக்க உள்ளனர்.
போடியில் நேற்று மாவட்ட வழங்கல் அதிகாரி மாரிச்செல்வி தலைமையில், தாசில்தார் சந்திரசேகர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், போடி நகரமைப்பு ஆய்வாளர் சுகதேவ், பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார், அரசு போக்குவரத்து கழக மேலாளர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதில் போடி திருமலாபுரம், சாலைக் காளியம்மன் கோயில், போஜன் பார்க், கட்டபொம்மன் சிலை, முந்தல் ரோடு உள்ளிட்ட விபத்து நடக்கும் இடங்கள் குறித்தும், வேகத்தடை, ஒளிரும் ஸ்டிக்கர், தடுப்புச் சுவர் அமைப்பது குறித்தும், போக்குவத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்களை அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.