உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தேனி தாலுகாவில் கலெக்டர் ஆய்வு
தேனி, ஜன. 23: தேனி தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி தாலுகாவில் அரசு பணி செயல்பாடுகள் குறித்த ஆய்வுப் பணிகள் நேற்று நடந்தது. தேனி தாலுகா அலுவலகத்தில் நேற்று, இத்திட்டம் சார்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொள்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. இதனைத்தொடர்ந்து கொடுவிலார்பட்டி ஊராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து, தேனி அல்லிநகரம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். தேனி மனநல அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, சிகிச்சை பெற வருகை தந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், தேனி தாலுகா அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை துறை அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.
மேலும், முதல்அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விபத்து நிவாரணத் தொகையாக ஒருவருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் இயற்கை மரண உதவித்தொகையாக தலா ரூ.22 ஆயிரத்து 500 வீதம் 125 பேருகுகு ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 500க்கான காசோலைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, பெரியகுளம் சப்.கலெக்டர் ரஜத்பீடன், கூடுதல் போலீஸ் டிஎஸ்பி கேல்கர்சுப்ரமணிய பாலசந்ரா, சமூக பாதுகாப்புதிட்ட தனித்துறை ஆட்சியர் சாந்தி, தேனி தாசில்தார் சதீஷ்குமார் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.