செங்கல் சூளை ஓனர் மீது தாக்குதல்
போடி, மார்ச் 12: செங்கல் சூளை ஓனரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சி பொட்டல்களம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமார்(52). இவர் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பகுதியில் செங்கல் காளவாசல் நடத்தி வருகிறார். நேற்று குமார் செங்கல் காளவாசல் செல்லும் பாதையில் வியாபாரியிடம் வெங்காயம் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது போடி மேல சொக்கநாதபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தார். குமாரை பார்த்து, ஓரமாக நிற்க கூடாதா என கேட்டு திட்டி உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் காயமடைந்த குமார் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். இது குறித்து குமார் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தப்பிய மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.